சகுனம்!

பகுத்திடும் அறிவைப் பாழடித்து
படித்த அறிவை மறந்துவிட்டு
மிகுதியாய் புதுமை பேசிடுவோர்
மின்மினிப் பூச்சி ஒளிபோன்றோர்
வகுத்து வாழ்வை வாழ்ந்திடுவோர்
வழுக்கி விழுந்த கதையில்லை
மிகுத்து பேதமைச் சேற்றினிலே
மிதக்கும் மனிதர் பதராவார்!

பில்லி சூனியம் எனச்சொல்லி
பிஞ்சு மனத்தைக் கெடுக்கின்றார்
செல்லாக் காசின் நிலைபோல
செல்லப் பிள்ளை வளர்கின்றான்
எல்லாம் இறைவன் செயலென்னும்
எண்ணம் முயற்சியைத் தடுக்கிறது
பொல்லா சகுனச் சேற்றினிலே
புகுந்து அறிவும் அழிகிறது

பல்லி கொட்டி துணையழைக்கும்
பக்தியில் இவனும் சகுனமென்பான்
பல்லி பூரான் எலிகண்டு
பாயும் பூனை குறுக்கிட்டால்
நல்ல காரியம் தடைபடுமாம்
நடக்கப் பயந்து திரும்புகிறான்
எல்லா சகுனம் பார்த்துத்தான்
இப்படி வீழ்ந்தான் என் தமிழன்!

காட்டுத் தனமாய் வாழ்கின்றான்
கற்றறி வாளர் சொல்வதையும்
கேட்டும் கேளா திருக்கின்றான்
கீழே விழுந்து கிடக்கின்றான்
நாட்டில் வாழும் படித்தவன்தான்
நல்லறி வின்றி கெடுக்கின்றான்
ஏட்டிலே இருப்பது வேதமென
எதையும் ஆய்ந்திட அஞ்சுகின்றான்!

அறிவியல் உளவியல் கற்பவனும்
அண்டம் கோள்நிலை படிப்பவனும்
அறிவியல் அறிவைப் பெறவில்லை
அதன்திறன் அறியும் மனமில்லை
நெறிகள் வகுக்கா காலத்தில்
நெடிதாய் படைத்த கற்பனையை
நெறிகள் வேதம் என்றெண்ணி
நெஞ்சில் இருத்தி அஞ்சுகிறான்!

3 மறுமொழிகள்:

Blogger விழி said...

பார்வையிட்டு மறுமொழியிட்டதற்கு 'பச்சோந்தி' அவர்களுக்கு நன்றி.

தங்களின் மறுமொழியில் இனைக்கப்பட்டிருந்த வலைப்பூவின் தொடுப்பில்(சென்று பார்த்தேன்) தனிப்பட்டவர்கள் மீதான சில நேரடித் தாக்குதல்கள்(எனது பதிவுடன் தொடர்பற்ற) இடம்பெற்றிருந்ததால், தங்கள் மறுமொழியை முதலில் பிரசுரித்திருந்தாலும், பின்னர் சிறிது நேரத்தில்(உங்கள் தொடுப்பினை பார்வையிட்ட பின்) நீக்கிவிட்டேன்.

மன்னிக்கவும்.
(தனிப்பட்ட ரீதியில் தங்களுடன் எந்தவித மனக்கசப்பும் இல்லை)

9:55 PM  

Blogger விழி said...

கோவி.கண்ணனும் ஒரு "சகுனம் போட்டிருக்கிறார். நன்றாக இருக்கிறது.
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_115312964740757469.html

10:46 PM  

Blogger கோவி.கண்ணன் said...

உங்கள் தலைப்பை பார்த்துவிட்டுதான் அந்த குறுங்கவிதையை போட்டேன்.... உங்கள் எழுத்துக்களும் அருமையாக வந்திருக்கிறது !

1:07 AM  

Post a Comment

<< முகப்பு